பக்தர்களை அவமதித்தாரா அமைச்சர்? ஹிந்து அமைப்பினர் கண்டனம்
பக்தர்களை அவமதித்தாரா அமைச்சர்? ஹிந்து அமைப்பினர் கண்டனம்
ADDED : ஜன 18, 2025 07:56 PM

துாத்துக்குடி:பொங்கல் விடுமுறை என்பதால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொது தரிசன வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பொது தரிசன வரிசையில் வந்த பக்தர்கள் அனைவரும் கோவில் அருகேயுள்ள மண்டப அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். 6 மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் நிற்க வைக்கப்பட்டிருந்ததால், அரசுக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.
அந்த மண்டப அறைகளில் உணவு அருந்த எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. கைக் குழந்தைகளுடன் வந்த பக்தர்கள், தண்ணீர் வசதி கூட இல்லை என கூறினர். தங்களை வெளியே விட்டால் போதும். சுவாமியை கூட பார்க்காமல் செல்ல தயாராக இருப்பதாக அங்கிருந்தவர்களிடம் பக்தர்கள் புலம்பினர்.
இதற்கிடையே, கோவில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக லோக்சபா எம்.பி., கனிமொழி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்தனர்.
அவர்களை பார்த்ததும், பொது தரிசன அறையில் அடைக்கப்பட்டிருந்த பக்தர்கள்,  '6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கிறோம்; எந்த வசதியும் இல்லாததாலும் சிரமப்படுகிறோம். எப்போது, சுவாமியை தரிசனம் செய்ய முடியும் என்றும் தெரியவில்லை' என வேதனையை உரத்தக் குரல் சொன்னார்கள். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பக்தர்களின் கோஷம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார் அங்கு வந்திருந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.
'6 மணி நேரம் காத்திருப்பதற்கெல்லாம் நாமென்ன செய்ய முடியும்? திருப்பதிக்கு போனால், 24 மணி நேரம் நின்று சுவாமி தரிசனம் செய்பவர்கள், இங்கிருக்கும் முருகனை தரிசிக்க 6 மணி நேரம் நிற்க மாட்டார்களா?' என உரத்த குரலில் அதிகாரிகளிடம் பேசிய படியே நடந்து சென்றார்.
இதுதொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, முருக பக்தர்களை அவமதிப்பது போல அமைச்சர் சேகர்பாபு பேசியது கடும் கண்டனத்துக்குரியது என ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

