'கார்பெட் ஏரியா' கணக்கிடுவதில் வேறுபாடு; ரியல் எஸ்டேட் ஆணைய பதிவால் குழப்பம்
'கார்பெட் ஏரியா' கணக்கிடுவதில் வேறுபாடு; ரியல் எஸ்டேட் ஆணைய பதிவால் குழப்பம்
ADDED : நவ 13, 2024 11:39 PM

சென்னை : கட்டடங்களின், 'கார்பெட் ஏரியா' எனப்படும் பயன்பாட்டு பகுதி பரப்பளவை கணக்கிடுவதில், பொது கட்டட விதிகளுக்கு மாறாக, ரியல் எஸ்டேட் ஆணையம், வேறு அணுகுமுறையை கடைபிடிப்பதால், பிரச்னை ஏற்பட்டுள்ளதாக, கட்டுமானத் துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.
வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. இதை அமல்படுத்துவதற்காக, ரியல் எஸ்டேட் ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கட்டாயம்
இந்நிலையில், 5,381 சதுர அடி, அதற்கு மேற்பட்ட பரப்பளவில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய, ரியல் எஸ்டேட் ஆணையம், தனியாக சில வழிமுறைகளை வகுத்துள்ளது.
ஒரு கட்டடத்தில், கார்பெட் ஏரியா என்பது, சுவர்களுக்கு இடைப்பட்ட பயன்பாட்டு பகுதி என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், பொது கட்டட விதிகளில் சுவர்களின் தடிமனும் சேர்த்து, கார்பெட் ஏரியா கணக்கிடப்படுகிறது.
குறிப்பாக, சுவர்கள், உட்புற நடைபாதைகள், பால்கனி போன்ற இடங்களும், கார்பெட் ஏரியாவில் சேர்ந்ததாகக் கருதி, பொது கட்டட விதிகளின்படி கட்டட அனுமதி வழங்கப்படுகிறது.
இதே வரைபடத்தை, ரியல் எஸ்டேட் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, சுவர்களின் தடிமன், உட்புற நடைபாதை, பால்கனி, வராண்டா போன்ற இடங்கள் தவிர்க்கப்படுகின்றன.
இதனால், வீட்டின் பரப்பளவு குறைத்து கணக்கிடப்படும் நிலை ஏற்படுகிறது.
சந்தேகம்
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
பொது கட்டட விதிகளின் அடிப்படையில், கார்பெட் ஏரியாவை கணக்கிடுவதே சரியாக இருக்கும். ஆனால், கட்டடத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர்த்து, கார்பெட் ஏரியாவை கணக்கிடுவதால் தவறான புரிதல் ஏற்படுகிறது.
வீடு வாங்குவோர், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு ஆவணங்களை பார்க்கும்போது, வீட்டின் பரப்பளவை கட்டுமான நிறுவனம் குறைத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, பொது கட்டட விதிகளின் அடிப்படையில், கார்பெட் ஏரியாவை கணக்கிட வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையத்திடம் முறையிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.