அரசு துறைகளில் மேம்படாத மின்னணுமயம் 'டிஜி லாக்கரில்' ஆவணங்கள் பெறுவதில் சிக்கல்
அரசு துறைகளில் மேம்படாத மின்னணுமயம் 'டிஜி லாக்கரில்' ஆவணங்கள் பெறுவதில் சிக்கல்
ADDED : அக் 11, 2024 09:54 PM
அரசு துறைகளில், 'டிஜிட்டல்' மயமாக்கம் மேம்படுத்தப்படாததால், 'டிஜி லாக்கர்' செயலியில் ஆவணங்கள் பெற முடியாத நிலை தொடர்கிறது.
மத்திய அரசு, 2015ல், 'டிஜி லாக்கர்' செயலியை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்தது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், இச்செயலி அறிமுகமானது.
மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர், மின்னணு முறையில் ஆவணங்களை வழங்குவதற்கும், அவற்றை சரிபார்க்கும் தளமாகவும், இச்செயலி உள்ளது.
இதில், அரசால் வழங்கப்படும் முக்கிய ஆவணங்கள், அடையாள அட்டை அனைத்தையும் பதிவிறக்கம் செய்யவும், பாதுகாத்து வைக்கவும் முடியும். இணையதளம், மொபைல் போன் செயலி வாயிலாக, டிஜி லாக்கரில் தங்களது ஆதார் எண் பதிவு செய்து கணக்கு துவங்கலாம்.
குற்றச்சாட்டு
ஆதார், பான் எண், ஓட்டுனர் உரிமம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் பெற முடியும்.
சென்னை மாநகராட்சியால் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்; மாநில பிறப்பு, இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட, 1990க்கு பிந்தைய ஆவணங்கள்; பள்ளி கல்வி துறை சார்பில் வழங்கப்ப்டட பத்தாம் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ்கள் இதில் கிடைக்கின்றன.
மேலும், தனியார் கல்வி நிறுவனங்களின் ஆவணங்கள், இருப்பிட சான்று, திருமண சான்று, மின் ஆளுமை முகமை சான்றிதழ்கள் போன்றவற்றையும் பெறலாம். ஆனால், அரசு கல்வி நிறுவனங்களின் சான்றுகள் கிடைப்பதில்லை.
இந்தச் செயலி வாயிலாக பெறப்படும் ஆவணங்களை, அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், காவல் துறை, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுத்தலாம்.
இவை, தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ன்படி செல்லும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயலியில் பெறப்படும் ஆவணங்கள், அசல் ஆவணங்களுக்கு இணையானவை.
இந்த டிஜி லாக்கர் செயலியில், தமிழகத்தை விட, டில்லி, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், டிஜிட்டல் முறையில் ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது, கட்டட திட்ட அனுமதி, மாற்றுத்திறனாளிகள் சான்று உள்ளிட்ட பெரும்பாலான ஆவணங்களை பெற முடிகிறது.
மற்ற மாநிலங்களை விட, பல்வேறு வகையில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், டிஜிட்டல் மயமாக்கலில், தமிழக அரசு துறைகள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடவடிக்கை
குறிப்பாக ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வரக்கூடிய, ஒரு கோடி மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியில், பிறப்பு, இறப்பு சான்றிதழ் தவிர, சொத்து வரி, கட்டட திட்ட அனுமதி, கேளிக்கை வரி, குடிநீர் வரி உள்ளிட்ட ஆவணங்கள், 'டிஜி லாக்கரில்' கிடைக்காத நிலை தொடர்கிறது.
நகராட்சியில் சொத்து வரி, கட்டட திட்ட அனுமதி போன்றவை, இணையதளம் வாயிலாக வழங்கப்படும் நிலையில், டிஜி லாக்கரில் அவை கிடைக்காததால், அவற்றை பயன்படுத்தும் பயனாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற மாநகராட்சிகளில், டிஜி லாக்கரில் எவ்வித ஆவணங்களையும் பெற முடிவதில்லை.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனிடம் கேட்டபோது, ''டிஜி லாக்கரில் பிறப்பு, இறப்பு ஆவணங்கள் கிடைக்கும். ஏதாவது ஆவணம் கிடைக்கவில்லை என்றால், என்ன காரணம் என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
- கார்த்திகேயன்
செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.
- நமது நிருபர் -