ADDED : ஜன 02, 2026 04:25 PM

புதுடில்லி: '' ஒவ்வொரு முறையும் ஏழை மக்கள் இறக்கும்போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்திய பொது மக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தூரில் குடிநீருக்கு மாறாக விஷமே விநியோகிக்கப்பட்டது. அதே சமயம் நிர்வாகம் கும்பகர்ணனைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது.
வீடுதோறும் துயரம் பரவியுள்ளது. ஏழைகள் நிர்கதியாக நிற்கின்றனர். இதற்கு எல்லாம் மேலாக பாஜ தலைவர்களிடம் இருந்து ஆணவமாக அறிக்கைகள் வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டன. அரசோ அதற்கு பதில் அகந்தையை வழங்கி உள்ளது.
அசுத்தமான துர்நற்றம் வீசும் தண்ணீரைப் பற்றி மீண்டும் மீண்டும் மக்கள் புகார் அளித்தனர். இருந்தும் ஏன் செவிசாய்க்கப்படவில்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்தது எப்படி?சரியான நேரத்தில் நீர் விநியோகம் ஏன் நிறுத்தப்படவில்லை? பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்
இவை சும்மா கேட்கப்படும் கேள்விகள் இல்லை. இவை அனைத்தும் யார் பொறுப்பு ஏற்பார்கள் என்பதற்கான கோரிக்கை. சுத்தமான நீர் என்பது சலுகை அல்ல. அது வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமை கொலை செய்யப்பட்டதற்கு பாஜவின் இரட்டை இன்ஜின் அரசும், அதன் அலட்சியமான நிர்வகம் மற்றும் அதன் இரக்கமற்ற தலைமை ஆகியவையே பொறுப்பு.
மபி மாநிலம் இப்போது மோசமான ஆட்சியின் மையமாக மாறியுள்ளது. ஓரிடத்தில் இருமல் மருந்து குடித்து ஏற்படும் மரணங்கள்.மற்றொரு இடத்தில் அரசு மருத்துவமனைகளில் எலிகளால் குழந்தைகளின் உயிர்கள் பறிக்கப்படுவது. இப்போது கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து ஏற்படும மரணங்கள். ஒவ்வொறு முறையும் ஏழை மக்கள் இறக்கும் போது பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

