கேரளாவில் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 5 மணி நேரமாக வீரர்கள் போராட்டம்
கேரளாவில் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 5 மணி நேரமாக வீரர்கள் போராட்டம்
UPDATED : ஜன 02, 2026 05:06 PM
ADDED : ஜன 02, 2026 04:21 PM

மலப்புரம்: கேரளாவில் காலணி உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஆலையின் பெரும் பகுதி எரிந்து சேதம் அடைந்தது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
மலப்புரம் அருகே உள்ள அரவங்காரா என்ற பகுதியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு திடீரென தீப்பிடித்ததாக அங்குள்ளோர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ பகுதிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்றனர். தீயை அணைக்கும் முயற்சியில் அவர்கள் களம் இறங்கினர்.ஆனால், தீயின் கொடூரம் அதிகமாக இருந்ததோடு, மற்ற பகுதிகளுக்கும் தீ ஜூவாலைகள் வேகமாக பரவின.
இதையடுத்து, திரூர், பொன்னானி, மஞ்சேரி, மீஞ்சந்தா, பெரிந்தல்மன்னா ஆகிய பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டன. தொழிற்சாலையின் அருகில் குடியிருப்பு பகுதிகள் அதிகம் இருந்ததால் தீயை அணைக்க அவர்கள் முற்பட்டனர்.
கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், ஆலையின் 90 சதவீதம் முற்றிலும் எரிந்து போய்விட்டது. தீ விபத்துக்கான காரணம் என்பது தெரியாத நிலையில், மின்கசிவே காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் ஏற்பட்ட சேதாரம் என்ன என்பது பற்றி எவ்வித தகவல்களும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

