கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு நடத்துவதில் சிக்கல்
கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு நடத்துவதில் சிக்கல்
ADDED : மார் 15, 2024 12:38 AM
சென்னை:சிவகங்கை மாவட்டம் கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில், அகழாய்வு நடத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி.
தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலுார் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார் ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான நிதியையும், தமிழக தொல்லியல் துறை பெற்றுள்ளது. ஆனால், மத்திய அரசு இதுவரை அகழாய்வுக்கு அனுமதி தரவில்லை. இந்த அனுமதியை கடந்த டிசம்பர் அல்லது ஜனவரியில் வழங்கி இருக்க வேண்டும்.
இன்னும் அனுமதி கிடைக்காததால், பெறப்பட்ட நிதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த வாரத்துக்குள் அனுமதி கிடைத்தால், இந்த நிதியை பயன்படுத்தி அகழாய்வை துவக்க முடியும்; இல்லாவிட்டால், நிதியாண்டு இறுதியில் நிதியை ஒப்படைத்து, ஏப்ரலுக்கு பின் தான் நிதி பெற முடியும்.
அதன்பின் பணியை துவக்கினால், நான்கு மாதங்களில் மழை காலம் துவங்கி விடும். இதனால், தமிழக அகழாய்வுகளை முழுமையாக முடிக்க முடியாத சூழல் ஏற்படும்.
ஆதிச்சநல்லுாருக்கும் சிக்கல்
மத்திய அரசு சார்பில், துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் கடந்தாண்டு வரை அகழாய்வு நடந்தது. இந்தாண்டும் அகழாய்வு பணிகளை தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும், இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டு, அகழாய்வை தீவிரப்படுத்த தொல்லியல் அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் பணிகள் துவங்கவில்லை.

