ADDED : ஏப் 07, 2025 01:07 AM
சென்னை: காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., மாற்றப்பட்டு, 11 மாதங்களாகியும், புதிய டி.ஐ.ஜி., நியமிக்கப்படவில்லை. அதேபோல, திருநெல்வேலி டி.ஐ.ஜி., பணியிடமும் காலியாக உள்ளது.
சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் அதிகம். இங்கு தொழிற்சாலை இரும்பு கழிவுகளை எடுக்கும் விவகாரத்தில், ரவுடிகள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.
குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டிய டி.ஐ.ஜி., பணியிடம், 11 மாதங்களாக காலியாக உள்ளது. அதேபோல, திருநெல்வேலி டி.ஐ.ஜி., பணியிடமும் காலியாக உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
காஞ்சிபுரம் டி.ஐ.ஜி.,யாக இருந்த பொன்னி, கடந்த ஆண்டு மே மாதம், மத்திய அரசு பணியான, மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில், காஞ்சிபுரத்திற்கு புதிய டி.ஐ.ஜி., நியமிக்கப்படவில்லை. வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க், டி.ஐ.ஜி., பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில், 17 நாட்களுக்கு மேலாக, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, பாதுகாப்பு பணிகளை கவனிக்க, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, காவலர் நலப்பிரிவு டி.ஐ.ஜி., துரை அனுப்பி வைக்கப்பட்டார். டி.ஐ.ஜி., இல்லாததால் நிர்வாக பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
அதேபோல, கடந்த மாதம், 25ம் தேதி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,யாக இருந்த அபிநவ் குமார் மதுரைக்கு மாற்றப்பட்டார். திருநெல்வேலி டி.ஐ.ஜி., மூர்த்தி, ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார்.
திருநெல்வேலிக்கு டி.ஐ.ஜி., நியமிக்கப்படவில்லை. திருநெல்வேலி கமிஷனர் சந்தோஷ் ஹதிமானி, திருநெல்வேலி டி.ஐ.ஜி., பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில், கொலை, ரவுடிகள் மோதல், ஜாதி ரீதியான மோதல் அதிகம். அந்த மாவட்டங்களுடன், கன்னியாகுமரி மாவட்டத்தையும் கண்காணிக்க வேண்டும்.
எனவே, அந்த மாவட்டங்கள் குறித்து நன்கு அறிந்த அதிகாரியை, டி.ஐ.ஜி.,யாக பணியமர்த்த வேண்டும். திருநெல்வேலி கமிஷனருக்கு இருக்கும் பணிச்சுமையில், இரண்டு பொறுப்புகளையும் கவனிப்பது சிரமம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

