‘டிஜி லாக்கர்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 70 கோடியை தாண்டியது
‘டிஜி லாக்கர்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 70 கோடியை தாண்டியது
UPDATED : நவ 21, 2026 08:05 PM
ADDED : நவ 21, 2026 08:05 PM
சென்னை: மத்திய அரசின் டிஜிட்டல் ஆவண பாதுகாப்பு தளமான, 'டிஜி லாக்கர்' சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 70 கோடியை கடந்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை, காகித வடிவில் கையில் எடுத்து செல்வது சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இதற்கு தீர்வாக, மொபைல் போனில், எங்கும், எப்போதும் எளிதாக காண்பிக்கும் வகையில், ‘டிஜி லாக்கர்’ டிஜிட்டல் ஆவண காப்பக வசதியை, மத்திய அரசு ஏற்படுத்தியது.
பொதுமக்கள், பயணிக்கும் இடங்களிலும், சோதனைகளின் போதும், ஆவணங்களை உடனுக்குடன், டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க, 'டிஜி லாக்கர்' பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, வாகன ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்று, ஆதார், பான் கார்டு, கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக சேமித்து, தேவைப்படும் இடங்களில், அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த முடிகிறது.
காகிதமில்லா நிர்வாகத்தை ஊக்குவிக்கும் நோக்கில், அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிஜி லாக்கர்’ வசதிக்கு, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ‘டிஜி லாக்கர்’ தளத்தை, 70 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு துறைகள், கல்வி நிறுவனங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், இதில் பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ்கள், அசல் ஆவணங்களுக்கு இணையான சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இதனால், ஆவணங்கள் தொலைந்து போகும் அச்சமின்றிப் பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தி வருகின்றனர்.
