'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு பணிகள் வருவாய், தோட்டக்கலை துறைகளில் எதிர்ப்பு
'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு பணிகள் வருவாய், தோட்டக்கலை துறைகளில் எதிர்ப்பு
ADDED : டிச 05, 2025 08:24 AM

சென்னை : வருவாய் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், மத்திய அரசு உத்தரவுப்படி, 'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு பணிகளை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாய நிலங்களின் தன்மை, பயிர் வகைகள், விவசாயிகளின் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மின்னணு மயமாக்கும் வகையில், 'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு முறையை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஒப்பந்தம் அதன்படி, தமிழகத்தில் ஆண்டுக்கு மூன்று முறை டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள, 'கிராப் சர்வே' என்ற மொபைல் போன் செயலியில் தகவல்களை சேகரித்து, 'ஆன்லைனில்' பதிவேற்றும் பணிகள் நடக்கின்றன.
பல மாநிலங்களில், வருவாய் துறை அலுவலர்கள் மேற்பார்வையில், தனியார் நிறுவனங்களை பயன்படுத்தி, ஒப்பந்த அடிப்படையில், இப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்த தகவல்கள் துல்லியமாக இல்லை என கருதிய தமிழக அரசு, வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை துறையினரையும், வேளாண் கல்லுாரி மாணவர்களையும், இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறது.
கல்லுாரி மாணவர்களை, இந்த பணிக்கு பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால், அத்திட்டம் நிறுத்தப்பட்டது. மாநிலம் முழுதும் சம்பா பருவ நெல் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட பலவகை பயிர்கள் சாகுபடியும் நடக்கிறது.
இதை அடிப்படையாக வைத்து மானிய நிதி ஒதுக்கீடு, உரங்கள் ஒதுக்கீடு ஆகிய பணிகளை, மத்திய அரசு செய்ய வேண்டும்.
அதற்கு, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு விபரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகள், இன்னும் துவங்கப்படாமல் உள்ள ன.
இதுகுறித்து, வேளாண் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தமிழகத்தில், 61 கோடி ஏக்கர் அளவிற்கு, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டுள்ள வருவாய் துறையினர், இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அலுவலக பணிகளை தொடர முடியாததாலும், வார விடுமுறை அளிக்காததாலும், தோட்டக்கலைத் துறையினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகள் தாமதமாகின்றன.
சாகுபடி இது வேளாண்மை, தோட்டக்கலை துறையின் பணி அல்ல; முழுக்க முழுக்க வருவாய் துறையினரின் பணி. தேவையில்லாமல், வேளாண் துறையினரை இதில் இழுத்து விட்டுள்ளனர். இதனால், சாகுபடி நேரத்தில் விவசாயிகளுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இப்பணிக்கு மத்திய அரசு, 100 கோடி ரூபாயை வழங்குகிறது. அந்த நிதியில், தனியார் நிறுவனங்களை நியமித்து பணிகளை முடிக்க, அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

