ஏழை மக்களுக்கான வீட்டுவசதி திட்டம்: பயனாளிகள் செலவை குறைக்க நடவடிக்கை
ஏழை மக்களுக்கான வீட்டுவசதி திட்டம்: பயனாளிகள் செலவை குறைக்க நடவடிக்கை
ADDED : டிச 05, 2025 08:25 AM

சென்னை: நகர்ப்புற வாழ்விட வாரிய திட்டங்களில், வீடு ஒதுக்கீடு பெறும் பயனாளிகளின் செலவை ஈடுசெய்யும் வகையில், 76 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, ஏழை மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன. இதில், ஒவ்வொரு திட்டத்திலும் தமிழக அரசு அல்லது மத்திய அரசின் பங்களிப்பு, 90 சதவீதமாக இருக்கும். வீட்டின் மதிப்பில், 10 சதவீத தொகையை, பயனாளிகள் செலுத்த வேண்டும் என்ற விதி உள்ளது.
இதன்படி, வீடு ஒதுக்கீடு பெறுவோர், 1.50 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. பெரும்பாலான பயனாளிகளால், இத்தொகையை ஒரே தவணை யில் செலுத்த முடிவதில்லை. இதனால், பயனாளிகள் தங்கள் பங்கு தொகையை செலுத்த வங்கிக்கடன் வசதிக்கு, நகர்ப்புற வாழ்விட வாரியம் நடவடிக்கை எடுக்கிறது.
இந்நிலையில், மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்ட பயனாளிகளின் பங்கு தொகையை, அரசே ஏற்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.
இது குறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாரிய திட்டப் பகுதிகளில் வீடு பெறுவோரில், பொருளா தார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவ அரசு முன்வந்துள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு துறையில் கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த வகையில், அரசுக்கு ஆண்டுக்கு, 680 கோடி ரூபாய் வரை வசூலாகிறது. இந்த நிதியில் இருந்து, 76.66 கோடி ரூபாயை, நகர்ப்புற வாழ்விட திட்ட பயனாளிகள் பங்கு தொகை செலவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார். சென்னையில், 7; திருநெல்வேலி, கரூர், மதுரை ஆகிய நகரங்களில் தலா ஒரு இடம் என மொத்தம், 10 குடியிருப்பு திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடாக, இந்த நிதி வழங்கப்படுகிறது.
இதனால், பயனாளிகளின் பங்களிப்பு தொகையில், 70 முதல் 90 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. சென்னை, திருநெல்வேலி, கரூர், மதுரை நகரங்களில், 3,908 ஒதுக்கீட்டாளர்கள் பயன் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

