கோவில் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது பெரிய பணி: ஐகோர்ட் கிளை கருத்து
கோவில் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது பெரிய பணி: ஐகோர்ட் கிளை கருத்து
ADDED : ஆக 08, 2026 07:47 PM

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகாவிலுள்ள கோவில்களுக்குரிய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, கோவில் நிர்வாகங்களுக்கு வழங்க கோரிய வழக்கில், 'பழைய ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை என்ற கலெக்டரின் நிலைப்பாட்டை பாராட்டுகிறோம். இது மிகப்பெரிய பணி. கோவில்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை' என, உத்தரவிட்டு முடித்து வைத்தது, உயர் நீதிமன்ற மதுரை கிளை.
அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை ஆகியவை கேரளாவில் இருந்தன. அதன்பின், தமிழகத்தில் இணைக்கப்பட்டன. இப்பகுதி கோவில்கள், அவற்றுக்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கன்னியாகுமரி கலெக்டரிடம் கேரள அரசு ஒப்படைத்தது.
சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்களிடம் தனித்தனியாக ஆவணங்கள் வழங்கப்படவில்லை. கோவில் சொத்துக்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. பல கோவில்களின் சொத்துக்களை மூன்றாம் நபர்கள் அனுபவிக்கின்றனர். சில ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகாவிலுள்ள கோவில்களுக்குரிய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, கோவில் நிர்வாகங்களுக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கன்னியாகுமரி மாவட்டம், 1956ல் கேரளாவிலிருந்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, 1958- - 1978 வரையிலான காலகட்டத்தில், மறு நில அளவை மேற்கொள்ளப்பட்டது.
அது தொடர்பான செட்டில்மென்ட் நில ஆவணங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
ஆவண காப்பகத்திற்கு கடிதம்: மாவட்டத்திலுள்ள கோவில்கள் தொடர்பான செட்டில்மென்டுக்கு முந்தைய மற்றும் செட்டில்மென்ட் அதாவது தேவஸ்வம் நில செட்டில்மென்ட் ஆவணங்கள், 1960ல் திருவனந்தபுரத்திலுள்ள பொதுத்துறையின் மத்திய ஆவண காப்பகத்திலிருந்து பெறப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை தற்போது கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தில் இல்லை.
கன்னியாகுமரி மாவட்டம் முழுதுக்குமான பழைய செட்டில்மென்ட் ஆவணங்களின் நகல்களை வழக்கக்கோரி, கேரளா மத்திய ஆவண காப்பகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, நகல்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டால், அரசின் நிதி ஒதுக்கீடு அடிப்படையில் செட்டில்மென்ட் ஆவணங்களை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, மறு நில அளவை செட்டில்மென்ட் ஆவணங்களின் அடிப்படையில் கோவில் நிலங்களுக்கான ஆவணங்களை அறநிலையத்துறை பராமரிக்கிறது.கோவில் நிலங்களை அடையாளம் காண, அளவீடு செய்ய, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்க, அறநிலையத்துறையால் தனி தாசில்தார் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
உடனடி சாத்தியமில்லை:
மாவட்டத்தில் கிராமங்கள் பிரிக்கப்படுவதற்கு முன், 81 கிராமங்கள் இருந்தன. அவற்றில், 56,753 சர்வே எண்கள் உள்ளன. ஒவ்வொரு சர்வே எண்ணும், 15 உட்பிரிவுகளை கொண்டுள்ளது. அதன்படி, 8 லட்சத்து 51,295 ஆவணங்களை ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளது. இது, மிகப்பெரிய பணி. அதிக மனிதவளம், நீண்ட கால அவகாசம், நிதி தேவைப்படும். பழைய ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இது, மிகப்பெரிய பணி. கலெக்டரின் நிலைப்பாட்டை பாராட்டுகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அல்லது செங்கோட்டை தாலுகாவிலுள்ள கோவில்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை வழங்குமாறு, எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. வழக்கை முடித்து வைக்கிறோம்' என்றனர்.
