செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த தினகரன்
செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த தினகரன்
ADDED : பிப் 14, 2025 02:01 AM

சின்னமனூர்:முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சுக்கு தினகரன் ஆதரவு தெரிவித்தார்.
தேனி மாவட்டம், சின்னமனூரில் அ.ம.மு.க., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் தினகரன் பேசியதாவது:
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள் விற்கப்படுகிறது. சாராயம்,கஞ்சா கேள்வி பட்டிருக்கிறோம். இப்போது வாய்க்குள் நுழையாத பெயர்களுடன் போதை பொருட்கள் நடமாட்டம் உள்ளது. குட்கா விற்கும் பெட்டிக் கடைக்காரர்களை பிடிக்கின்றனர். மொத்த வியாபாரியை விட்டுவிடுகின்றனர். இதை தடுக்க வேண்டிய முதல்வர் திருநெல்வேலியில் அவ்வா சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.
திருப்பரங்குன்றம் பிரச்னையில் சமாதானம் செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால் மோதல் வரட்டும் என நினைக்கின்றனர். அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தை தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என்று ஐகோர்ட் கூறியுள்ளது.
அத்திக் கடவு- அவினாசி திட்டத்திற்கு 2011ல் ஜெயலலிதா ஆய்வு மற்றும் சர்வே செய்ய நிதி ஒதுக்கினார். அதற்கான பாராட்டு கூட்டத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் இல்லை. இதற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் எம்.ஜி.ஆர், காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர், அவரது கருத்தை வரவேற்கிறேன். உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் செங்கோட்டையன் கருத்தை வரவேற்கின்றனர்.
2026 ல் நமது கூட்டணிக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. மேலும் சில கட்சிகள் வர உள்ளது. எனவே தேர்தல் பணியை தொய்வின்றி செய்ய தயாராகுங்கள் என்றார்.

