ADDED : நவ 27, 2025 01:37 AM

சென்னை: 'குவைத்தில், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழரை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
குவைத் நாட்டில் பணிபுரிந்த, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, பொட்டிதட்டி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், கடந்த 15ம் தேதி, அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவைத்தில், கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவரை, திடீரென கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
அவரை தொடர்பு கொள்ள முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல், அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், தவித்து வருகின்றனர்.
எனவே, இந்திய துாதரகம் வாயிலாக தொடர்பு கொண்டு, குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மீட்டு, தாயகம் அழைத்து வர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

