'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி வெற்றி பெற்ற மாணவர்கள் அமெரிக்கா பயணம்
'தினமலர் - பட்டம்' வினாடி - வினா போட்டி வெற்றி பெற்ற மாணவர்கள் அமெரிக்கா பயணம்
ADDED : மே 09, 2025 01:29 AM

சென்னை:'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் சார்பில், 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட, வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்கள், அமெரிக்காவின் நாசாவுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர்.
பள்ளி மாணவர்கள், கணிதம், அறிவியல், வரலாறு, பொது அறிவு, மொழித்திறன் போன்றவற்றில், திறமையை வளர்த்துக் கொள்ள, 'தினமலர்' நாளிதழ் சார்பில், மாணவர் பதிப்பாக, 'பட்டம்' இதழ் வெளியாகிறது. இதை படிக்கும் மாணவர்களிடம், கற்றல் சார்ந்த அறிவு தேடலை விரிவுபடுத்த, ஆண்டுதோறும் வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது.
கடந்த 2020ல், 'பதில் சொல்: அமெரிக்கா செல்' என்ற தலைப்பில், போட்டி நடத்தப்பட்டது. மாநிலம் முழுதிலும் இருந்து, பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்களிடம் கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. சிறப்பாக பதில் அளித்த, சென்னை செம்பாக்கம், ஜியான் மெட்ரிக் பள்ளி மாணவியர் தனுஸ்ரீ, பெரில் ஜியோனா; கோவை மாவட்டம் சோமயாம்பாளையம் பி.எஸ்.பி.பி., மில்லினியம் பள்ளி மாணவர்கள் பிரணவ் வர்ஷன், சக்தி எம் நிதின்; புதுச்சேரி பெத்தி செமினார் நள்ளி மாணவர் விஜயகணபதி ஆகியோர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களை அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கு, 'தினமலர்' சார்பில் அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது. அப்போது, கொரோனா தொற்று பரவல் இருந்ததால், அனுப்ப முடியவில்லை; நேற்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, துபாய் வழியாக அமெரிக்கா சென்றனர். அங்கு நாசா மற்றும் பல முன்னணி கல்வி நிறுவனங்களை, சுற்றி பார்க்க உள்ளனர். வரும், 18ம் தேதி, சென்னை திரும்புகின்றனர். மாணவர்களுடன், 'கோ 4 குரு' நிறுவனம் உரிமையாளர் காயாம்பு ராமலிங்கம் சென்றுள்ளார்.
அமெரிக்கா புறப்பட்ட மாணவர்கள் கூறியதாவது:
'தினமலர்' சார்பில், 'பட்டம்' மாணவர் இதழ் ஆரம்பித்த நாளிலிருந்து, ஆர்வத்துடன் படித்து வருகிறோம். 'பட்டம்' இதழ் மிகுந்த நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தது. முதல் முறை, அதுவும் அமெரிக்காவின் நாசாவுக்கு செல்வது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
நாங்கள் பணம் செலவு செய்யாமல், 'தினமலர்' சார்பில் செல்வது கூடுதல் மகிழ்ச்சி. மாணவர்களுக்கு பயனுள்ள, இதுபோன்ற முயற்சிகளை, 'தினமலர்' நாளிதழ் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

