ADDED : செப் 01, 2011 12:09 AM
சென்னை : முட்டிக்கு கீழ் கைகளையும், முட்டிக்கு கீழ் மற்றும் மேல் கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், செயற்கை கருவிகளை பெற விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் செய்திக் குறிப்பு: முட்டிக்கு கீழ் கைகளை இழந்த மற்றும் முட்டிக்கு கீழ் மற்றும் மேல் கால்களை இழந்த கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, நவீன வகை செயற்கை அவயங்கள், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலகங்கள் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவசமாக வழங்கப்படுகிறது. நவீன செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், பள்ளி அல்லது கல்லூரி முதல்வர்களிடம் பெற்ற சான்று ஆகியவற்றுடன், அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு உடனே நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இதேபோல, முட்டிக்கு கீழ் கால் இழந்த பணிபுரியும் அல்லது சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும் நவீன வகை செயற்கை கால்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. இவர்கள், கால் முட்டிக்கு கீழ் நவீன செயற்கை கால்கள் பெற, விண்ணப்பத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் பணிபுரியும் நிறுவனத்தில் சான்று பெற்று, தாங்கள் வசிக்கும் பகுதி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.