ADDED : ஜன 06, 2026 05:50 AM

சென்னை: 'பொங்கல் கரும்பை, விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
பொங்கல் திருநாளையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் கரும்பை, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்களிடமிருந்து வாங்க, தி.மு.க., அரசு முடிவு செய்துள்ளது. கரும்பு கொள்முதலில் கூட, விவசாயிகளை தி.மு.க., அரசு சுரண்டுவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு, இந்த முறை ஒரு கரும்புக்கு 35 ரூபாய் வழங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு கரும்புக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவோம் என இடைத்தரகர்கள் கூறியுள்ளனர்.
இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். எனவே, பொங்கல் கரும்பை, விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

