ஸ்டாலினுடன் தான் நேரடி பேச்சு: தி.மு.க., குழுவுடன் பேச திருமாவளவன் தயக்கம்
ஸ்டாலினுடன் தான் நேரடி பேச்சு: தி.மு.க., குழுவுடன் பேச திருமாவளவன் தயக்கம்
ADDED : மார் 18, 2026 04:39 AM

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசாமல், முதல்வர் ஸ்டாலினுடன் நேரடியாக பேச, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள வி.சி., கடந்த தேர்தலை விட, கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. குறைந்தது 12 தொகுதிகளை ஒதுக்குமாறு, தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவுடன் நடந்த முதற்கட்ட பேச்சில் வி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 'கடந்த தேர்தலை போலவே, ஆறு தொகுதிகளில் போட்டியிடுங்கள்; வேண்டுமென்றால், கூடுதலாக ஓரிரு தொகுதிகளை, கட்சி தலைமையிடம் கேட்டு வாங்கி தருகிறோம். இரட்டை இலக்கத்தில் ஆசைப்படாதீர்கள்' என, தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிருப்தி அடைந்த திருமாவளவன், தொகுதி பங்கீட்டு பேச்சில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீடு தொடர்பாக அவர் பேசினார். அதற்கு, தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசுமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
எனினும், தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச, திருமாவளவன் தயக்கம் காட்டுகிறார். முதல்வர் ஸ்டாலினுடன் நேரடியாக பேச விரும்புகிறார். மேலும், 'இரட்டை இலக்கத்துக்கு குறைவான தொகுதிகளை பெற மாட்டோம்' என, வி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியினர் கூறுகையில், 'கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, விரைவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதாக தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது. 'தொடர்ந்து தே.மு.தி.க.,வுடன் பேசிய பின், வி.சி.,யுடன் பேச்சு நடத்துவதாக தி.மு.க., கூறியுள்ளது. வி.சி., இல்லாமல், தேர்தலை தி.மு.க., எதிர்கொள்ளாது. எனவே, நாங்கள் விரும்பியபடி இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுவோம்' என்றனர்.

