ADDED : மார் 01, 2024 10:13 PM

சென்னை:போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், விசாரணைக்கு தயாராக இருப்பதாக, இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், 36, போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். டில்லியில் இவரது கூட்டாளிகள், சென்னையைச் சேர்ந்த முகேஷ், 33, முஜிபுர் ரஹ்மான், 34, விழுப்புரம் அசோக்குமார், 34 ஆகியோர், டில்லியில் பிப்., 15ல் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து, 75 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெத்தாம்பெட்டமைன்' எனப்படும் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தும், 'சூடோபெட்ரின்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், ஹோட்டல் தொழில் அதிபர், சினிமா தயாரிப்பாளராக உள்ள ஜாபர் சாதிக், இயக்குனர் அமீருக்கு நெருக்கமாக இருந்துள்ளார். அவரது இயக்கத்தில், 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இருவரும் உறவினர்கள், தொழில் பார்ட்னர்கள் என, கூறப்படுகிறது. ஜாபர் சாதிக் தேடப்படுவதை அறிந்த அமீர், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'பட தயாரிப்பை மீறி ஜாபர் சாதிக்கிற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என, கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை, சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீடு மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில், சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
பறிமுதல் செய்த ஆவணங்களின் அடிப்படையில், நுங்கம்பாக்கத்தில், தி.மு.க., மாவட்ட செயலர் ஒருவரின் அலுவலகத்திலும் சோதனை நடந்துள்ளது. அமீரும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமீர் கூறியுள்ளதாவது:
'இறைவன் மிகப்பெரியவன்' என்ற என் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தொடர்பான குற்றச்சாட்டுடன், என்னையும் தொடர்புபடுத்தி, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே அறிக்கை வாயிலாக தெளிவுப்படுத்தி விட்டேன். நான் மது, வட்டி, விபசாரம் உள்ளிட்டவற்றுக்கு எதிரான சித்தாந்தத்தை உடைய மார்க்கத்தை கடைப்பிடிப்பவன்.
எனினும், குற்றச்செயலுடன் என்னை தொடர்புபடுத்தி, தகவல் வெளியிடுவதன் வாயிலாக, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியுமே தவிர, என் குடும்பத்தாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர, நீங்கள் வேறு எந்த பயனையும் அடைந்து விட முடியாது.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு, காவல் துறையினர் மற்றும் பிற துறையினர் இருக்கின்றனர். அவர்கள் எப்போது அழைத்தாலும், விசாரணைக்கு தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

