sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்

/

இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்

இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்

இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்


UPDATED : மே 03, 2023 03:35 PM

ADDED : மே 03, 2023 01:22 PM

Google News

UPDATED : மே 03, 2023 03:35 PM ADDED : மே 03, 2023 01:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (மே 3) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்னை காரணமாக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் நாளை காலை 10.30 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது.

இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்பட 24 படங்களை இயக்கியும், ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர், சினிமா ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் இரங்கல்


பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

வாழ்க்கை வரலாறு


தஞ்சை மாவட்டம், மருங்கூர் என்ற ஊரில் 1953ல் டிச., 8ல் பிறந்தார். இவரது நிஜப்பெயர் பாலசந்தர். ஓவியம் சார்ந்த படிப்பை முடித்த அவர் சிறந்த ஓவியர். இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்பட்டறையிலிருந்து பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக, பின்னாளில் வெள்ளித்திரையில் ஜொலித்த இயக்குனர்களான கே பாக்யராஜ், மணிவண்ணன், கே ரங்கராஜ், மனோஜ் குமார் ஆகியோரின் வரிசையில் மிக முக்கியமான இயக்குனராக அறியப்படுபவர் மனோபாலா. Image 1107110

பாரதிராஜா அறிமுகம்


தனது பள்ளிப் பருவத்திலேயே திரைத்துறைதான் தனக்கான துறை என தீர்மானித்து, சென்னை வந்து பல போராட்டங்களுக்குப் பின், நடிகர் கமல்ஹாசனின் சிபாரிசின் பேரில் பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்து, அவரிடம் உதவி இயக்குனராக பணியமர்த்தப்பட்டார். பாரதிராஜாவின் 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை துவக்கிய இவர், பாலசந்தர் என்ற தனது இயற்பெயரையும் மனோபாலா என மாற்றி அமைத்துக் கொண்டார்.

'நிறம் மாறாத பூக்கள்', 'கல்லுக்குள் ஈரம', 'நிழல்கள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'டிக் டிக் டிக்' என பாரதிராஜாவின் பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து அனுபவம் பெற்றார். 1982ல் கார்த்திக் மற்றும் சுஹாசினி நடிப்பில் வெளிவந்த 'ஆகாய கங்கை' என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக ஒரு இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இயக்குனர் மனோபாலா.

முதல் இயக்கம்


முதல் படம் தோல்விப் படமாக போக, 1985 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக, நடிகர் மோகன் மற்றும் ராதிகா நடிப்பில், கதாசிரியர் பி கலைமணி தயாரித்த 'பிள்ளை நிலா' திரைப்படம் மனோபாலாவிற்கு ஒரு திருப்புமுனையைத் தந்த திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து விஜயகாந்தை நாயகனாக வைத்து 'சிறைப்பறவை', 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்', 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்', நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த 'ஊர்க்காவலன்', சத்யராஜ் நடிப்பில் 'மல்லு வேட்டி மைனர்' என 80களின் முன்னணி நாயகர்களை இயக்கி வெற்றி கண்டதோடு, குடும்பக் கதை, காதல் கதை, க்ரைம் த்ரில்லர் கதை என வித விதமான கதைக்களங்களில் பயணித்து வெற்றி கண்டார். Image 1107111

நடிப்பிலும் முத்திரை


பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தபோதே 'புதிய வார்ப்புகள்', மணிவண்ணனின் 'கோபுரங்கள் சாய்வதில்லை' போன்ற ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தன்னை ஒரு நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்ட மனோபாலாவை ஒரு முழுநேர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே எஸ் ரவிகுமார். 1998ல் கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'நட்புக்காக' திரைப்படத்தில் 'மதுரை' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மனோபாலா. அதன்பின் இப்போதைய இளம் நடிகர்கள் வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து அசத்தினார்.

தயாரிப்பாளர்


கடைசியாக இவர் இயக்கிய திரைப்படம் 2002ல் நடிகர் ஜெயராம் நடித்து வெளிவந்த 'நைனா' என்ற திரைப்படமாகும். 2014ம் ஆண்டு தனது 'மனோபாலாஸ் பிக்சர் ஹவுஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'சதுரங்க வேட்டை' என்ற திரைப்படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து 'பாம்புச் சட்டை', 'சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்களும் இவர் தயாரித்த திரைப்படங்களே. இவற்றில் சதுரங்க வேட்டை 2 படம் சில பிரச்னைகளால் ரிலீஸாகாமல் முடங்கி உள்ளது.

சின்னத்திரை


'அல்லி ராஜ்ஜியம்', 'மாயா', 'செம்பருத்தி', 'ராஜபார்வை' போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம், ஒரு சின்னத்திரை நடிகராகவும் அறியப்பட்டார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். அதுமட்டுமல்லாது தனியாக யுடியூப் சேனல் துவக்கி சினிமா தொடர்பான பல விஷயங்களையும் வழங்கி வந்தார். பல திரைப்பிரபலங்களையும் பேட்டி எடுத்து, பல சுவாரஸ்ய தகவல்களையும் கொடுத்தார்.

மனோபாலாவிற்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.

ஓவியர், திரைப்பட இயக்குநர், கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட இந்த திரைக் கலைஞர், தனது நீண்ட நெடிய கலைப்பயணத்தில் தமிழ், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 40 திரைப்படங்கள் வரை இயக்கியும், 3 திரைப்படங்கள் தயாரித்தும், 200க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார். ஹாலிவுட் படமான தி லயன் கிங் தமிழ் பதிப்பிற்கு டப்பிங் குரலும் கொடுத்தார்.

பன்முக படைப்பாளியான மனோபாலாவின் மறைவு நிச்சயம் திரையுலகிற்கு பேரிழப்பே.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மனோபாலாவை பிரிந்து வாடும், அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

பிரபல திரைப்பட இயக்குனரும், சிறந்த நடிகருமான மனோபாலா காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்; அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us