மாற்றுத்திறனாளிகள் போராட்டம் போலீசை அணுக அறிவுறுத்தல்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் போலீசை அணுக அறிவுறுத்தல்
ADDED : பிப் 17, 2024 02:27 AM
சென்னை,:போராட்டத்துக்கு அனுமதி கோரி போலீசை அணுகும்படி, பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வை குறைபாடு உடையவர்களுக்கு 1 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்கின்றனர்.
இந்நிலையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்த, பார்வை குறைபாடு உடையவர்களுக்கு அனுமதி கோரி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்; திடீரென சாலையில் அமர்ந்து போராட முடியாது. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில், போலீஸ் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி மறுத்தால், நீதிமன்றத்தை நாடலாம்' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
மேலும், 'சட்டப்படியான ஆர்ப்பாட்டத்தில், போராட்டத்தில் போலீசார் அத்துமீறினால், நீதிமன்றம் தலையிடும். அதனால், போராட்டத்துக்கு அனுமதி கோரி போலீசை அணுக வேண்டும்' என முதல் பெஞ்ச் தெரிவித்து, விசாரணையை முடித்து வைத்தது.