பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 29, 2025 08:35 PM
சென்னை:'அரசு பணியாளர்கள் பதவி உயர்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில தலைவர் சந்திரகுமார் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
'மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1996 பிரிவு 34ன் படி, அரசு பணியில் இருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, பதவி உயர்வு வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், மாற்றுத்திறனாளி அலுவலர் ஒருவர், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்று மாதத்திற்குள், 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பதவி உயர்வு வழங்க வேண்டும் என, 2023 ஜனவரியில் தீர்ப்பு அளித்தது. ஆனால், இதுவரை அரசாணை வெளியிடவில்லை.
எனவே, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை, அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்