கோட்டையை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது
கோட்டையை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது
ADDED : ஏப் 23, 2025 01:24 AM

சென்னை:சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடப்பதால், கோட்டையை முற்றுகையிட முயன்ற 1,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை, போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் பாதிப்பை பொறுத்து, அவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலையில் இருந்து பேரணியாக சென்று, நேற்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
இதற்காக, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர்; 10,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை வீட்டுச் சிறையிலும் வைத்தனர்.
சென்னையில், கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்கள், சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் வருகை குறித்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பஸ், ரயில்களில் வெளியூரில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.
1,500 பேர்
எனினும், போலீசாரின் கெடுபிடிகளையும் மீறி, 1,500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், பாரிமுனை, உழைப்பாளர் சிலை அருகே குவிந்தனர். அவர்கள் கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
போலீசார் தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருவதால், 1,190க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை, போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று, கோயம்பேடு பகுதியில் தங்க வைத்தனர்.
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் காரணமாக, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலர் ஜான்சி கூறியதாவது:
நம் அண்டை மாநிலமான ஆந்திராவில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
எங்களுக்கு அநீதி
அம்மாநிலத்தை போன்று, தமிழக அரசும் மாதாந்திர உதவித் தொகையை, 2,000 ரூபாய் என்பதில் இருந்து, ஊனத்தின் தீவிரத்தை பொறுத்து, 6,000, 10,000, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில், எங்களின் பிரதான கோரிக்கையான உதவித்தொகையை, முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி அறிவிப்பார் என, எதிர்பார்த்தோம்; ஏமாற்றமே மிஞ்சியது.
வருவாய் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை இரண்டிலும் உதவித்தொகை பெறுவதாக கூறி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.
நுாறு நாள் வேலை திட்டத்திலும் எங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். தவறினால், எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

