'சிலீப்பர்' பஸ்களிலும் கட்டண சலுகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை
'சிலீப்பர்' பஸ்களிலும் கட்டண சலுகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை
ADDED : மார் 17, 2024 03:50 AM
சென்னை : அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும், 'சிலீப்பர்' பஸ்களிலும், கட்டண சலுகை அளிக்க வேண்டுமென, முதல்வருக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாநில தலைவர் வில்சன் கூறியதாவது:
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் பல்வேறு குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக, கடந்த ஆண்டு அக்., 3ம் தேதி, தனியாக குறைதீர் கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டது.
இதுபோன்ற குறைதீர் கூட்டங்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தி, அவர்களது குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும்.
அரசு பஸ்களில் பயணிக்கும் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளை அபகரித்து, அமரும் பிற பயணியரை எச்சரிக்கும் விதத்தில், அதற்கான அபராதத் தொகை 500 ரூபாய் அல்லது 1,000 ரூபாய் என, இருக்கை மேல்புறத்தில் எழுதி விளம்பரம் செய்ய வேண்டும்.
அரசு விரைவு போக்கு வரத்து கழக பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, படுக்கை வசதியுடைய இருக்கைகள், சலுகை கட்டணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை.
இணையதள முன்பதிவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான படுக்கை வசதி காண்பிக்கப்படுவதில்லை. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில், படுக்கை வசதி இருக்கைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும்.
அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் ஊர்தி படி வழங்கப்படாத அனைத்து மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கும், உடனடியாக ஊர்தி படி 2,500 ரூபாய் வழங்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

