ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக பொருட்களை அனுப்பினால் பணி நீக்கம்
ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக பொருட்களை அனுப்பினால் பணி நீக்கம்
UPDATED : ஜன 31, 2024 03:18 AM
ADDED : ஜன 30, 2024 10:22 PM

சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
அவற்றை, நுகர்பொருள் வாணிபக் கழகம், ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்புகிறது. சங்கங்களின் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு தானியங்களை அனுப்பும் போது மூட்டைக்கு, 5 கிலோ வரை எடை குறைவாக இருப்பதாக புகார்கள் எழுகின்றன. அந்த இழப்பை ரேஷன் ஊழியர்கள் ஏற்கும் நிலை உருவாகிறது.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில், தரமான உணவு தானியங்கள் அனுப்புவதை உறுதி செய்யுமாறு, நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்களை இறக்கி வைக்கும் போது, ஊழியர் முன்னிலையில் மூட்டைகளை எடையிட்டு காட்டுமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எடை குறைவாக மூட்டைகள் வந்தால், அதை பிரிக்காமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊழியர்கள் புகார் அளிக்கலாம். எடை குறைவுக்கு காரணமான நபர்கள் மீது, பணிநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.