அ.தி.மு.க., உள்கட்சி தேர்தல் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
அ.தி.மு.க., உள்கட்சி தேர்தல் எதிர்த்த வழக்கு தள்ளுபடி
ADDED : பிப் 07, 2024 12:46 AM
சென்னை:அ.தி.மு.க.,வில் உள்கட்சி தேர்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு:
அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், உள்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சி விதிகளின்படி, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில்,உள்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்த வேண்டும்.
இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் பதில் இல்லை. உள்கட்சி தேர்தலை நடத்தாமல், அ.தி.மு.க.,வில் நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
கடந்த 2021ல் தொடரப்பட்ட இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், 'உள்கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை; சர்வாதிகார முறையில் நடந்தது. எனவே, நீதிமன்றம் தலையிட வேண்டும்' என கோரப்பட்டது.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், ''உள்கட்சி தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. உள்கட்சி தேர்தல் விவகாரத்தில், ஆணையம் தலையிட முடியாது,'' என்றார்.
இதையடுத்து, 'உள்கட்சி தேர்தல் நடந்து, பொதுச்செயலர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது; வழக்கில், எதிர்மனுதாரராக அ.தி.மு.க.,வை சேர்க்கவில்லை' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

