துணை முதல்வரிடமிருந்து தப்பிக்க அவசர கதியில் மனுக்கள் 'டிஸ்போஸ்'
துணை முதல்வரிடமிருந்து தப்பிக்க அவசர கதியில் மனுக்கள் 'டிஸ்போஸ்'
ADDED : டிச 24, 2024 09:24 PM
திருப்பூர்:துணை முதல்வர் உதயநிதியின் ஆய்வில் இருந்து தப்பிப்பதற்காக, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள், நிலுவை மனுக்கள் ஏராளமானவற்றைத் தள்ளுபடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த, 19ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். முன்னதாக, சென்னையிலிருந்து வந்த குழுவினர், மாவட்டம் முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்தும், கள ஆய்வுகள் நடத்தியும், அறிக்கை தயாரித்து, துணை முதல்வரிடம் அளித்திருந்தனர்.
சுதாரித்துக்கொண்ட திருப்பூர் மாவட்ட அதிகாரிகள், நிலுவை மனுக்கள் அதிகளவில் வைத்திருந்தால், உதயநிதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என கருதி, மாத கணக்கில் நிலுவையில் இருந்த ஏராளமான மனுக்களை தள்ளுபடி செய்து விட்டனர். இதனால், மனு அளித்த மக்கள் விரக்தி அடைந்தனர். திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவர், பொது பிரச்னைகள் தொடர்பாக, 2021 முதல் இம்மாதம் வரை வழங்கியிருந்த 27 மனுக்களுக்கு, உதயநிதியின் ஆய்வு காரணமாக, அவசர கதியில் முடித்து வைத்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.