அமைச்சர் மீது அதிருப்தி; தி.மு.க., கவுன்சிலர் முழுக்கு
அமைச்சர் மீது அதிருப்தி; தி.மு.க., கவுன்சிலர் முழுக்கு
ADDED : ஜன 02, 2024 12:10 AM
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி சேர்மனாக தி.மு.க.,வைச் சேர்ந்த மைக்கேல் உள்ளார். தி.மு.க., இலக்கிய அணி மாவட்ட நிர்வாகி முருகன் மனைவி வசந்தாதேவி, 14வது வார்டு கவுன்சிலராக உள்ளார். திருச்சியில், தி.மு.க., தெற்கு மாவட்ட செயலராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உள்ளார்.
கவுன்சிலர் வசந்தாதேவி, தன் கணவருடன் தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக, மாவட்ட செயலர் மகேஷுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தற்போதுள்ள அரசியல் சூழல் காரணமாக, கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
வசந்தாதேவி தரப்பில் கூறப்படுவதாவது: என் வார்டில், அமைச்சர் மகேஷ் பங்கேற்ற ரேஷன் கடை திறப்புக்கு கூட என்னை அழைக்கவில்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு என் கணவரையோ, கவுன்சிலர் என்ற முறையில் என்னையோ அழைப்பதில்லை.
மணப்பாறை நகராட்சியை, முதல்முறையாக அ.தி.மு.க., கைப்பற்ற துணை போன தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவருக்கும் கட்சிப்பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவமானங்களுடன் ஆளுங்கட்சி கவுன்சிலராக இருக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

