ஒரு யூனிட் கனிம வளத்துக்கு ரூ.400 'கப்பம்' ஆளுங்கட்சி யினர் செயலால் அதிருப்தி
ஒரு யூனிட் கனிம வளத்துக்கு ரூ.400 'கப்பம்' ஆளுங்கட்சி யினர் செயலால் அதிருப்தி
ADDED : செப் 22, 2024 07:51 AM
பொள்ளாச்சி : 'ஒரு யூனிட் கனிமவளத்துக்கு, 400 ரூபாய், 'கப்பம்' செலுத்த வேண்டும் என்ற, ஆளுங்கட்சியினர் நிர்பந்தத்துக்கு கனிமவள லாரி உரிமையாளர்கள் அடிபணியாததால், கடந்த, 20 நாட்களாக அனுமதி சீட்டு வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 60 கிரஷர், குவாரிகளில்,இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது போல, கனிமவள லாரிகளில் வசூல் வேட்டை தொடர்கிறது.
கடந்த, 2021ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைத்தபின், நான்கு மாதத்திலேயே வசூலுக்கு அடித்தளமிட்டனர். கிணத்துக்கடவு அருகே வடசித்துாரில், முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, சோதனைச்சாவடி அருகே பந்தல் அமைத்து, ஒரு யூனிட்க்கு,300 ரூபாய் வீதம் 'கப்பம்' வசூல் நடந்தது.
இ.டி., ரெய்டால் ஓட்டம்
அதன்பின், புதுக்கோட்டையை சேர்ந்த மற்றொரு அமைச்சருக்கு நெருக்கமானவருக்கு வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு யூனிட்டுக்கு, 400 ரூபாய் வீதம் 'கப்பம்' வசூல் தொடர்ந்தது. கடந்த, 2023ம் ஆண்டு அமலாக்கத்துறை ரெய்டு காரணமாக, வசூலில் ஈடுபட்டோர், ஓட்டம் பிடித்தனர். அதன்பின், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் செலுத்தி கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அதன்பின், கடந்தாண்டு டிச., மாதம் வசூலில் ஈடுபட்ட இரு கும்பலுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால், கட்சி தலைமை வரை இந்த பிரச்னை சென்றது. இதை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததால், வசூல் தடைபட்டது.
மீண்டும் வசூல்
இந்நிலையில், கடந்த மாதம், மீண்டும் புதுக்கோட்டை குரூப், ஒரு யூனிட்டுக்கு, 400 ரூபாய் வீதம் வழங்குவோருக்கு மட்டும், 'டிரான்ஸிட் பாஸ்' வழங்கப்படும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். இதற்கு, டிப்பர் லாரி உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள கனிமவளத்துறைஅதிகாரி ஒருவர், புதுக்கோட்டை குரூப் உடன் நெருக்கமாக இருப்பதால், கடந்த, 20 நாட்களாக, அனுமதி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், அரசுக்கு கட்டணம் செலுத்தி, இவர்களுக்கும், 400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், எங்களுக்கு கட்டுப்படியாகாது என, கேரளா, தமிழக கனிமவள லாரி உரிமையாளர்களும் போர்க்கொடி துாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, ஆளுங்கட்சியினர் 'அட்ராசிட்டி'யை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இத்தொழிலில் ஈடுபட்டோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிகாரிகள் ஆதரவு
லாரி உரிமையாளர்கள் கூறுகையில், 'லாரிகளை கடனுக்கு வாங்கி ஓட்டுகிறோம். இதில் கிடைக்கும் வருவாயை கொண்டு, வாழ்கிறோம். அரசுக்குரிய கட்டணத்தை செலுத்தினாலும், ஆளுங்கட்சியினர் ஒரு யூனிட்டுக்கு, 400 ரூபாய் கேட்கின்றனர்.
மக்களுக்கு விற்கும் கட்டணத்தை உயர்த்த முடியாது. இதனால், நஷ்டம் ஏற்படுகிறது. அதிகாரிகளும் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக இருப்பதால், இதை யாரிடம் முறையீடுவது என தெரியவில்லை,' என்றனர்.
புகார் கொடுக்கலாம்!
''கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதி கேட்பவர்களுக்கு, 'பாஸ்' வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்தால்,
போலீசில் புகார் கொடுக்கலாம்.
- விஜயராகவன்,
உதவி இயக்குனர்,
கனிமவளத்துறை, கோவை