ADDED : மார் 13, 2024 01:36 AM
சென்னை:உணவு வழங்கல் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில், 2021 மே, 7 முதல், 2023 ஜூன் 30 வரை, 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பில் உள்ள ரேஷன் கார்டுகள் அடிப்படையில், புதிய நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், ரேஷன் கார்டு வினியோக பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வெள்ளம் பாதித்த துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில், 27,577 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே, இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் தற்போது வழங்கப்படுகின்றன.
அவர்கள் அனைவரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள், புதிய ரேஷன் கார்டுகளை, வட்ட வழங்கல் அலவலகங்களுக்கு நேரில் சென்றோ, தங்கள் குடும்ப உறுப்பினரை அனுப்பியோ பெற்றுக் கொள்ளலாம்.
ரேஷன் கார்டு எண்ணை கடை ஊழியர்களிடம் தெரிவித்து, விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின், கடையில் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

