மே 31க்குள் ஜமாபந்தியை முடிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு
மே 31க்குள் ஜமாபந்தியை முடிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு
ADDED : ஏப் 21, 2025 05:24 AM
சென்னை; 'அனைத்து தாலுகாக்களிலும், ஜமாபந்தி நடத்தும் பணியை, மே 31க்குள் முடிக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
கலெக்டர்களுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் வருவாய் துறையால், கிராமம்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறை, ஜமாபந்தி எனப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தியை, அடுத்த மாதம் நடத்த, அனைத்து நடவடிக்கைகளையும், மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.
ஜமாபந்தி பட்டியலை, 15 நாட்களுக்கு முன்னதாக வெளியிட வேண்டும். ஜமாபந்தி அலுவலர்கள் பெயர், ஜமாபந்தி நடக்கும் தேதி, நேரம், இடம், ஒவ்வொரு தேதியிலும் இடம்பெறும் கிராமங்கள் பட்டியல் போன்றவற்றை, மாவட்ட அரசிதழில் வெளியிட வேண்டும்.
நடப்பாண்டு, 1433ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி நடக்க உள்ளது என்ற விபரத்தை, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஜமாபந்தியில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும். கிராமத்தில் நில வரி வசூலை ஆய்வு செய்ய வேண்டும்.
நீர்ப்பாசன திட்டங்கள், நில நிர்வாக சீர்திருத்த சட்டம், பட்டா வழங்கல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது, குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை, மனுதாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஜமாபந்தி அலுவலர், வேளாண் துறை அலுவலர்கள் கூட்டம் நடத்தி, துறையில் உள்ள பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு கண்டு, வேளாண் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜமாபந்தி பணி முழுதையும், மே 31க்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.