மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை நேரடி கொள்முதலுக்கு அனுமதி
மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை நேரடி கொள்முதலுக்கு அனுமதி
ADDED : ஏப் 04, 2026 06:54 PM

சென்னை: பல்பொருட்கள் அங்காடிகளுக்கு தேவையான பொருட்களை, மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், நேரடியாக கொள்முதல் செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 45 மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் உள்ளன. அவை, பல்பொருள் அங்காடிகள், முதல்வர் மருந்தகம் போன்றவற்றை நடத்துகின்றன.
அங்காடிகளில் விற்கப்படும், சோப்பு வகைகள் உள்ளிட்ட, எப்.எம்.சி.ஜி., எனப்படும் விரைவாக விற்பனையாகும் நுகர்பொருட்கள், பிரபல தனியார் நிறுவனங்களிடம் வாங்கப்படுகின்றன.
அவற்றை, கூட்டுறவு விற்பனை இணையம் மொத்தமாக கொள்முதல் செய்து, பண்டக சாலைகளுக்கு அனுப்புகிறது. மேலும், மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகளையும், கூட்டுறவு விற்பனை இணையமே கொள்முதல் செய்து அனுப்புகிறது.
மருந்துக்கான பணம் வழங்க, பண்டகசாலைகள் தாமதம் செய்வதால், மற்ற பொருட்களை சரியாக அனுப்புவதில்லை. இதனால், மொத்த விற்பனை பாதிக்கப்படுகிறது.
எனவே, பண்டகசாலைகளே நேரடியாக, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என, கூட்டுறவுத் துறை உயரதிகாரிகளுக்கு, பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று, பண்டகசாலை மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், 'அனைத்து பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தங்களுக்கு தேவையான நுகர்பொருட்களை, நேரடியாக தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
