காங்., கூட்டத்துக்கு ஆளுக்கு 500 பேர் கட்டாயம் தலைமை உத்தரவு; மாவட்ட தலைவர்கள் அதிருப்தி
காங்., கூட்டத்துக்கு ஆளுக்கு 500 பேர் கட்டாயம் தலைமை உத்தரவு; மாவட்ட தலைவர்கள் அதிருப்தி
ADDED : ஏப் 29, 2025 03:37 AM
சென்னையில் நடக்கவுள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா ஆகிய மூவரில் ஒருவரை அழைக்க முடிவு செய்துஉள்ளனர். அதனால், கூட்டத்தை காட்ட, மாவட்டத்திற்கு 500 பேரை அழைத்து வருமாறு, 76 மாவட்டத் தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டம் திரட்ட முடிவு
'அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்' என்ற தலைப்பில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் மைதானத்தில் மே 4ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த, தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அந்த கூட்டதை பெரிய அளவில் நடத்தும் நோக்கில், கட்சியின் தேசிய தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோரை அழைத்துஉள்ளனர்.
அவர்கள் வராதபட்சத்தில், பிரியங்காவையாவது அழைத்து வர, தமிழக காங்கிரசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அதனால், வழக்கமான காங்கிரஸ் நிகழ்ச்சிபோல இல்லாமல், இந்த பொதுக்கூட்டத்தில் பெரிய அளவில் கூட்டத்தை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரசில் மொத்தம் 76 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு 500 பேரை அழைத்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் உள்ளனர். அவர்கள் தலா, 1,000 பேர்; எட்டு எம்.பி.,க்கள் தலா 5,000 பேர் வீதம் ஆட்களை அழைத்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த 1985ல், முன்னாள் பிரதமர் ராஜிவ் பங்கேற்ற பொதுக்கூட்டம், தேனாம்பேட்டை காமராஜர் மைதானத்தில் நடத்தப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பின், அதே மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதனால், மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மாவட்டத் தலைவர்கள் சிலர், 500 பேரை அழைத்து வர மறுத்து விட்டனர்.
ஏற்க மறுப்பு
ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சூழ்நிலையில், சம்பாத்தியத்துக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. 500 பேரை மாநாட்டுக்கு திரட்டி வர வேண்டும் என்று உத்தரவிட்டால், எப்படி செய்யமுடியும் என கேட்டு, அதை எங்களால் செய்ய முடியாது என மறுத்து விட்டனர்.
கூடவே, அமைச்சர்களிடம் நிதியுதவி பெற்று, கூட்டச் செலவுகளை செய்வதாக, அந்த மாவட்டத் தலைவர்கள் சொல்கின்றனர்; அதை மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை.
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள் தங்கள் சொந்த செலவில் தான், ஆட்களை அழைத்து வர வேண்டும்.
அப்போதுதான், வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம் என, தலைமையில் இருந்து அதிகாரத்துடன் உத்தரவிட்டுள்ளனர். அதோடு, பெரிய அளவில் கூட்டத்தை காட்டினால் தான், தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு குறித்து பேச வசதியாக இருக்கும் என்றும் சொல்லி உள்ளனர்.
இதனால், கட்சித் தலைமை மீது மாவட்டத் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -