உதவி ஐ.ஜி., பதவி உயர்வில் அதிகார துஷ்பிரயோகம் மாவட்ட பதிவாளர்கள் புகார்
உதவி ஐ.ஜி., பதவி உயர்வில் அதிகார துஷ்பிரயோகம் மாவட்ட பதிவாளர்கள் புகார்
ADDED : ஏப் 02, 2025 02:31 AM

சென்னை:உதவி ஐ.ஜி., பதவி உயர்வு வழங்குவதில், குறிப்பிட்ட சிலருக்காக பதிவுத்துறை தலைவர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக, மாநில பணி அலுவலர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை மாநில பணி அலுவலர் சங்கத்தின் தலைவர் செந்துார்பாண்டியன் உள்ளிட்ட, 16 மாவட்ட பதிவாளர்கள், ஊழல் தடுப்பு பிரிவுக்கு அளித்துள்ள புகார் மனு:
தமிழகத்தில், 26 மாவட்ட தலைநகரங்களில் உள்ள நிர்வாக மாவட்ட பதிவாளர் பணியிடங்களை, உதவி ஐ.ஜி., நிலைக்கு தரம் உயர்த்தி, 2022ல் அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்படி, உதவி ஐ.ஜி., பதவி உயர்வு வழங்குவதற்கான பரிந்துரை கோப்பு, அரசுக்கு, 2023ல் அனுப்பப்பட்டது. அதில், இத்துறையின் அரசு செயலர் சில கூடுதல் விபரங்கள் கேட்டிருந்தார். அந்த கோப்பு, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திற்கு திரும்ப வந்தது.
அதில், 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மூத்த அதிகாரிகளை பின்னுக்கு தள்ளி, 2025 ஏப்., 1ல் தகுதி பெறும் சில பெண் அலுவலர்கள் பெயர்களை பரிந்துரை பட்டியலில் சேர்க்க முயற்சி நடக்கிறது.
இதற்காக, முதுநிலை பட்டியல் அடிப்படையில், ஏற்கனவே தகுதி பெற்றவர்கள் மீது வேண்டுமென்றே ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பதவி உயர்வை தடுக்கின்றனர்.
பதிவுத்துறை தலைவரின் நேரடி ஆதரவில், இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, குறிப்பிட்ட சில பெண் அலுவலர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 400 ஏக்கர் அரசு நிலம், பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளராகவும், கூடுதல் ஐ.ஜி.,யாகவும் உள்ள ஒருவரின் துணையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மனைப்பிரிவுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ததில், 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, இதே கூடுதல் ஐ.ஜி., மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுபோன்ற வழக்குகளை விடுத்து, பதவி உயர்வை தடுக்கும் நோக்கில், சில மாவட்ட பதிவாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் ஐ.ஜி.,யின் செயல்பாடுகள் குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை வலியுறுத்தி, செந்துார்பாண்டியன் தலைமையில் மாவட்ட பதிவாளர்கள், சென்னையில் நேற்று, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.