அடுக்குமாடி வீடுகளுக்கான கூட்டு மதிப்பில் குளறுபடி
அடுக்குமாடி வீடுகளுக்கான கூட்டு மதிப்பில் குளறுபடி
ADDED : பிப் 13, 2024 04:21 AM
சென்னை : பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகளுக்கான கூட்டு மதிப்புகள் முழுமையாக இல்லாததால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனையின் போது நிலத்துக்கு தனியாகவும், கட்டடத்துக்கு தனியாகவும் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நடைமுறையை கைவிட்டு, கூட்டு மதிப்பு அடிப்படையில், ஒரே பத்திரமாக பதிவு செய்யும் புதிய நடைமுறை டிசம்பர் 1ல் அமலுக்கு வந்தது.
இதற்காக முதலில், மூன்று வகை கூட்டு மதிப்புகள் வெளியிடப்பட்டன. கட்டுமான துறையினர் எதிர்ப்பால், மண்டல அளவில் தயாரிக்கப்பட்ட கூட்டு மதிப்புகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இந்த மதிப்பை இணையதளத்தில் பயன்படுத்த முடியவில்லை என்ற புகார் எழுந்தது.
இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: அடுக்குமாடி கட்டடங்களுக்கான, தெரு வாரியான கூட்டு மதிப்புகள், பதிவுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பதிவுத்துறை இணையதளத்தில், இந்த மதிப்புகள் முழுமையாக இல்லை என்று கூறப்படுகிறது.
பல இடங்களில் பதிவுக்கு வரும் பத்திரங்களில் குறிப்பிடப்பட்ட முகவரி மற்றும் சர்வே எண்ணில் நில வழிகாட்டி மதிப்பு உள்ளது. ஆனால், அடுக்குமாடி கட்டட கூட்டு மதிப்பு இல்லை. இதனால், பத்திரங்களை பதிவு செய்யா மல் திருப்பி அனுப்பும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, விடுபட்ட கூட்டு மதிப்பு தகவல்களை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்ற வேண்டும் என மேலதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.