நெல் கொள்முதல் பணியாளர் மீது பாயும் நடவடிக்கையால் கலக்கம்
நெல் கொள்முதல் பணியாளர் மீது பாயும் நடவடிக்கையால் கலக்கம்
ADDED : பிப் 23, 2024 02:35 AM
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில், மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அங்கு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் நிலையங்களில், மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாயும், எடையில் 2 கிலோ வரையிலும் கடந்த பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடக்கிறது.
இதற்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். நமது நாளிதழிலும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சென்னை தலைமை அலுவலக விழிப்பு பணி அலுவலரும், கூடுதல் பதிவாளருமான வில்வசேகரன் தலைமையிலான குழுவினர், தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, திருவையாறு அருகே திங்களூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதை உறுதி செய்தனர்.
அதன் படி, கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தாளர், உதவியாளர் ஆகியோரை நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்தனர்.
மேலும், இதை கண்காணிக்க தவறிய கொள்முதல் அலுவலரும் கொள்முதல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தீவிரம் காட்டி வருகிறார்.
அவரின் உத்தரவின் படி, கடந்த வாரம் பஞ்சநதிக்கோட்டை கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தர், பருவகால உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கைகளால், கொள்முதல் பணியாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.