ADDED : அக் 24, 2024 01:45 AM

சென்னை,:தீபாவளி பண்டிகையொட்டி, வட்டார போக்கு வரத்து மற்றும் சார் - பதிவாளர் அலுவலகங்களில், பட்டாசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் லஞ்சமாக பணம் வாங்குவதாக புகார் எழுந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், சில மாதம் முன் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார், நேற்று மாலை 6:00 மணியளவில், திடீரென வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வத்திடம் விசாரித்தனர்.
அதேபோல, சென்னை புறநகர் பகுதியான திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் சார் - பதிவாளர் அலுவலகங்களில் நேற்று மாலை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத, 3 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆலந்துார் சார்-பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 8,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல் கிண்டியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம், பூந்தமல்லி நகராட்சி அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது.
விருகம்பாக்கம், தாம்பரம் மற்றும் சேலையூர் சார்-பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையில், 60,000 ரூபாய் கைபற்றப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனை சாவடியில் கணக்கில் வராத 90,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பணத்துடன் ஆட்டோ மாயம்
செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடந்தது. இச்சோதனைக்கு முன்னதாக, பல லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்களுடன் ஆட்டோ ஒன்று, சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருந்து சென்றதாக கூறப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.