'தி.மு.க., - பா.ஜ., தான் எதிரிகள்; மற்ற கட்சிகளை விமர்சிக்காதீர்கள்!'
'தி.மு.க., - பா.ஜ., தான் எதிரிகள்; மற்ற கட்சிகளை விமர்சிக்காதீர்கள்!'
ADDED : நவ 06, 2024 06:33 PM
சென்னை:'தி.மு.க., - பா.ஜ., கட்சிகளை மட்டும் விமர்சியுங்கள்; மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்' என, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி மாவட்டச் செயலர்கள் கூட்டம், நேற்று நடந்தது.
அதில் பழனிசாமி பேசியுள்ளதாவது:
அ.தி.மு.க., 52வது ஆண்டு விழாவை ஒட்டி அறிவிக்கப்பட்ட பொதுக்கூட்டங்களை, சில மாவட்டங்களில் இன்னும் நடத்தவில்லை என்ற புகார் வந்துள்ளது. மழை காரணமாக, கூட்டம் நடத்துவது தடைபட்டிருக்கலாம். எவ்வித காரணமும் சொல்லாமல், இன்னும் 10 நாட்களுக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும். கட்சியினர் மற்றும் மக்களை சந்திக்கும் முகமாக, தமிழகம் முழுதும், 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
அப்போது, கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு நடத்துவேன். எனவே, உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை விரைந்து முடியுங்கள். கட்சி நிர்வாகிகள் சரியாக பணியாற்றவில்லை என்ற புகார் யார் குறித்தும் இனி என்னிடம் வரக்கூடாது; அப்படி எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் என்பது, கட்சியின் வெற்றிக்கு அடித்தளம். லோக்சபா தேர்தலின்போது நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் சரிவர பணியாற்றவில்லை; இதுவும் கட்சி களத்தில் தோல்வி அடைந்ததற்கு மிக முக்கிய காரணம். கட்சியில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல், செயல்படாதவர்களாக இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை நீக்கிவிட்டு, புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
எந்த நேரமும் உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்படலாம். அதனால், அதற்கு எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலுக்காக, மாவட்டம்தோறும் 40 பேர் முதல் 60 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தலுக்காக, அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும். யாரும் எதிர்பார்க்காத அளவில் வலுவான கூட்டணியை அமைப்பேன்; அது என்னுடைய பிரதான வேலை. நம்பிக்கையோடு இருங்கள்; இனி நமக்கான காலம்.
கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். மத்தியில் பா.ஜ., ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி ஆகியவற்றின் ஒட்டுமொத்த தவறுகளையும் லேசுபாசாக இல்லாமல் மிகக் கடுமையாக விமர்சிக்க வேண்டும். தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளை விமர்சித்தால், அக்கட்சிகள் மீது நாம் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் திசை மாறி சென்று விடும். அதனால், வீழ்த்தப்பட வேண்டிய நம்முடைய ஒரே இலக்கு தி.மு.க.,வும் பா.ஜ.,வும் தான்.
எனவே, மற்ற கட்சிகளை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை, சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அரசியல் களத்தில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக எந்த மோசமான விமர்சனம் வந்தாலும், அதை சமூக வலைதளங்கள் வாயிலாக பதிலடி கொடுக்க வேண்டும். என்ன மொழியில் விமர்சனம் வைக்கப்படுகிறதோ, அதே மொழியை நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால், எந்த விளைவுகள் வந்தாலும், அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.