தி.மு.க., - எம்.பி.,க்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை
தி.மு.க., - எம்.பி.,க்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை
ADDED : நவ 28, 2025 07:09 AM

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம் நாளை நடை பெறும்' என அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், கட்சியின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், நாளை காலை 10:00 மணியளவில், சென்னை அறிவாலய கூட்ட அரங்கத்தில் நடக்கும்.
'இதில், தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், வரும் டிச., 1 முதல் 19 வரை நடக்கவுள்ளது. இதில், தி.மு.க., - எம்.பி.,க்கள், எந்தெந்த பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல்கள் வழங்க இருப்பதாக தி.முக.,வினர் தெரிவித்தனர்.
தமிழகம் உள்ளிட்ட, 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடந்து வருகிறது. இதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எனவே, எஸ்.ஐ.ஆர்., பணி, கோவை, மதுரை மெட்ரோ அனுமதி மறுப்பு, நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக அதிகரிக்க மறுப்பு உள்ளிட்ட பிரச்னைகளை பார்லிமென்டில் எழுப்ப, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

