'மத்திய அரசு விவகாரம் என்றால் கும்பகர்ண துாக்கத்தில் பழனிசாமி'
'மத்திய அரசு விவகாரம் என்றால் கும்பகர்ண துாக்கத்தில் பழனிசாமி'
ADDED : நவ 28, 2025 07:08 AM

சென்னை: 'மத்திய அரசு விவகாரம் என்றால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கும்பகர்ண துாக்கத்தில் இருக்கிறார்' என அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு பதில் சொல்ல முடியாமல், சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தில் கிறுக்கி கொண்டிருக்கும் பழனிசாமி, வழக்கம் போல ஏதேதோ உளறிக் கொட்டி இருக்கிறார். மத்திய அரசு விவகாரம் என்றால், கும்பகர்ண துாக்கம் போடும் அவருக்கு, தி.மு.க., அரசு என்றால் வீராவேசம் வந்து விடுகிறது.
நெல்மணிகள் நனைந்து விட்டதாக, டெல்டா மாவட்டங்களுக்கு சென்று, ஓரங்க நாடகம் போட்ட பழனிசாமி, நெல் கொள்முதலுக்குரிய ஈரப்பத அளவை, 22 சதவீதமாக உயர்த்த மறுக்கும் மத்திய அரசை கண்டிக்கவில்லை.
விவசாயத்தை அழிக்கும் நோக்கிலான, மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகள் முதுகில் குத்தியவர் பழனிசாமி. அவருக்கு, சாகுபடி, பயிர் காப்பீடு குறித்தெல்லாம் பேச அருகதை இல்லை.
கஜா புயலின் போது, பயிர்கள் நாசமான நேரத்தில், மாமனார் வீட்டு விருந்தில் கொண்டாட்டம் போட்டவர். பல்லுயிர் பெருக்கத்தையும், விவசாயத்தையும் அழிக்கும், மதுரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க காரணமான கனிம வள சட்டத்தை, பார்லிமென்டில் ஆதரித்து துரோகம் செய்த வரலாறு, அவருக்கு உள்ளது.
கோவை, மதுரைக்கு, மெட்ரோ வர வேண்டும் என, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதை, பெரும் சாதனையாக தம்பட்டம் அடிக்கிறார். அவர் ஆட்சியில் இருந்த போது, அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர திராணி இல்லாததற்கு, வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

