'டிஜிட்டல் கிராப் சர்வே' பணிக்கு விவசாயிகளை பயன்படுத்த முடிவு; வேளாண் துறையினர் தகவல்
'டிஜிட்டல் கிராப் சர்வே' பணிக்கு விவசாயிகளை பயன்படுத்த முடிவு; வேளாண் துறையினர் தகவல்
ADDED : நவ 28, 2025 07:07 AM

தமிழகத்தில் கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை கணக்கிட, 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணி டிசம்பர் 1ல் துவங்குகிறது. இந்த முறை விவசாயிகளையும் பயன்படுத்தி, சர்வே செய்ய உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு முதல் சர்வே எண் வாரியாக, ஆடி, கார்த்திகை, கோடை பட்டங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் வேளாண் துறையால் கணக்கிடப்படுகின்றன.
கணக்கெடுப்பில் குறிப்பிட்ட சர்வே நிலத்தில் சாகுபடி செய்துள்ள பயிர் விபரங்கள் மற்றும் புகைப்படம், அதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டால் நிவாரணம் வழங்கவும், எதிர்காலத்திற்கான கணக்கீட்டிற்கும், இது தேவைப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த பணியை கடந்தாண்டு ஜூலையில், வி.ஏ.ஓ.,க்கள் மூலம் நடத்த திட்டமிட்டு தோல்வியடைந்தது. பின், 2024 கார்த்திகை பட்டம், 2025 கோடை சாகுபடியை கல்லுாரி மாணவர்கள் மூலம் நடத்தினர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. எனவே, கடந்த ஆடிப்பட்ட சாகுபடியை தன்னார்வலர்கள் மூலம் நடத்தினர்.
அதிலும் குளறுபடி ஏற்பட்டது. பின், வேளாண், தோட்டக்கலை துறைகள் மூலம் பணியை முடித்தனர். தற்போது கார்த்திகை பட்டத்தில், 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணியில் படித்த விவசாயிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் துறையினர் இப் பணியில் இணைந்து செயல்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முழு விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
- நமது நிருபர் - -

