தி.மு.க., -- எம்.எல்.ஏ., மரணம் உதயநிதி நேரில் அஞ்சலி
தி.மு.க., -- எம்.எல்.ஏ., மரணம் உதயநிதி நேரில் அஞ்சலி
ADDED : அக் 24, 2025 01:12 AM

நாமக்கல்: தி.மு.க., -- எம்.எல்.ஏ., பொன்னுசாமி நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் - தனி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்னுசாமி, 71; கடந்த இரு நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை, 8:00 மணியளவில் மாரடைப்பால் இறந்தார்.
இதையடுத்து, பொன்னுசாமி உடல், சேந்தமங்கலம் அருகே நடுக்கோம்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் மகேஷ், முத்துசாமி, சிவசங்கர், மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இறந்த எம்.எல்.ஏ., பொன்னுசாமி, கொல்லிமலை இலக்கிராய்பட்டியை சேர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர், 2011, 2016 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2021 தேர்தலில் வெற்றி பெற்றார்.
எம்.எல்.ஏ., பொன்னுசாமியின் மறைவுக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

