தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன், மருமகள் ஜாமின் மனு தள்ளுபடி
தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன், மருமகள் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : பிப் 06, 2024 11:17 PM

சென்னை:வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் மகன், மருமகளின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன், அவரது மனைவி மார்லினா ஆன் ஆகியோர் மீது, திருவான்மியூர் போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
கணவன், மனைவி இருவரும் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார். போலீசார் சார்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், புகாரளித்த பெண் சார்பில் வழக்கறிஞர் மோகன் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது. தற்போது, விசாரணை துவக்க நிலையில் உள்ளதால், விசாரணையை முடிக்க போதுமான அவகாசம், வாய்ப்பை, விசாரணை அதிகாரிக்கு வழங்க வேண்டும்.
ஜாமின் வழங்கினால், ஆவணங்கள், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

