தி.மு.க., -- நா.த.க., கடும் வாக்குவாதம் போர்க்களமானது ஓட்டுசாவடி மையம்
தி.மு.க., -- நா.த.க., கடும் வாக்குவாதம் போர்க்களமானது ஓட்டுசாவடி மையம்
ADDED : பிப் 05, 2025 10:09 PM
ஈரோடு:ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று, தொகுதி முழுதும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
தி.மு.க., - நா.த.க.,வினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஓட்டுச்சாவடி மையம் போர்க்களமானது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் நேற்று மாலை, 4:30 மணிக்கு கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வெளியூர் நபர்களை நாம் தமிழர் கட்சியினர் அழைத்து வந்து, தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதாக, தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர்.
அதேபோல, தி.மு.க.,வை சேர்ந்த இருவர், 40 கள்ள ஓட்டுகளை போட்டதாக கூறி, நாம் தமிழர் கட்சியினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டினர். இது, இரு தரப்பினரிடையே மோதல் போக்கை உருவாக்கி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஓட்டுச்சாவடி மையத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து, இரு கட்சியினரும் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்துக்கு ஈரோடு எஸ்.பி., ஜவகர் வந்தார். தி.மு.க.,வினர் பிரச்னைகளை கூறி மறியலுக்கு முயன்றனர். போலீசார் மோதல் போக்கை தவிர்க்க, தி.மு.க.,வினர், நாம் தமிழர் கட்சியினரை அங்கிருந்து தனித்தனியே அழைத்து சென்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிற மாவட்ட நபர்களான சசிகுமார், கவாஸ்கர், ஈரோடு கிழக்கு சுயேட்சை வேட்பாளர் லோகநாதன் ஆகியோரை விசாரணைக்காக வீரப்பன்சத்திரம் போலீசார் அழைத்து சென்றனர். ஒரு பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். வீரப்பன்சத்திரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதே போல, தொகுதியின் பல இடங்களிலும் உள்ள ஓட்டுச்சாவடி மையத்திலும் இதே போன்ற பிரச்னைகள் உருவாகி, பதற்றத்தை ஏற்படுத்தின. ஆங்காங்கே இருந்த போலீசார் தலையிட்டு பதற்றத்தை தணித்தனர்.