தி.மு.க., புறக்கணிப்பு; கூட்டணி கட்சிகள் கண்டனம்: காஸ் விலை உயர்வு ஆலோசனை கூட்டம் ரத்து
தி.மு.க., புறக்கணிப்பு; கூட்டணி கட்சிகள் கண்டனம்: காஸ் விலை உயர்வு ஆலோசனை கூட்டம் ரத்து
UPDATED : செப் 16, 2011 12:23 PM
ADDED : செப் 16, 2011 10:45 AM

புதுடில்லி: சமையல் காஸ் விலையை உயர்த்து குறித்து பொருளாதாரத்திற்கான அமைச்சரவை குழு ஆலோசனை கூட்டத்தை தி.மு.க., புறக்கணிப்பு மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்டனம் காரணமாக திடீர் என ரத்து செய்யப்பட்டது.
மத்திய அமைச்சரவை நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை உயர்த்தியது. இதனை தொடர்ந்து சமையல் காஸ் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது.ஏற்கனவே பெட்ரோல் விலையை கடந்த மே மாதம் ஐந்து ரூபாய் அளவிற்கு உயர்த்தியது. நான்கு மாத இடைவெளியில் மீண்டும் மூன்று ரூபாய் அளவிற்கு விலையை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ., இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சமையல் காஸ் விலையை உயர்த்து குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி தலைமையில் இன்று பொருளாதாரத்திற்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற இருந்தது. கூட்டத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிதலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தி.மு.க.,புறக்கணிப்பு: பெட்ரோல் விலையை உயர்த்துவதற்கு முன்னர் கூட்டணி கட்சி என்ற முறையில் தங்களுடன் ஆலோசனை நடத்த வில்லை என்று புகார் கூறி வந்த தி.மு.க.,வினர் இன்று நடைபெற உள்ள சமையல் காஸ் விலை உயர்வு ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க போவதாக அறிவித்தது.இதே போல் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பெட்ரோல் விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு தங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை என்றும் விலை உயர்வில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலு<ம் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த பொருளாதாரத்திற்கான அமைச்சரவை குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலும் தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் மற்றும் மூத்த தலைவர் இளங்கோவன் உட்பட பலர் வற்புறுத்தி வருகின்ற சூழ்நிலையில் தி.மு.க., தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.