தி.மு.க., கூட்டணி நிரந்தரமானது முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
தி.மு.க., கூட்டணி நிரந்தரமானது முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
ADDED : டிச 26, 2024 08:59 PM

சென்னை:''தி.மு.க., தலைமையிலான கூட்டணி நிரந்தரமானது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள, இந்திய கம்யூனிஸ்ட் மாநில அலுவலகத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, 100வது பிறந்த நாள் விழா, நடந்தது.
விழாவை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வரும் 29ம் தேதி, நெடுமாறன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கும் வகையில், நல்லகண்ணுவுக்கு சென்னையில் விழா நடத்தப்படும். பொதுவுடைமை இயக்கத்துக்கு நுாற்றாண்டு; நல்லகண்ணுவுக்கும் நுாற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் அமைந்தது இல்லை.
அமைதியாக, அடக்கமாக, ஆழமாக சிந்தித்து எதையும் வெளிப்படுத்தக்கூடியவர் நல்லகண்ணு. தொடர்ந்து எங்களை போன்ற இளைஞர்களுக்கு, வழிகாட்டி துணை நிற்க வேண்டும். வரும் சட்டசபைத் தேர்தலில், 200 அல்லது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், நமது கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க., தலைமையிலான கூட்டணி, கொள்கை கூட்டணி மட்டும் அல்ல; நிரந்தர கூட்டணி.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.சி., தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''அம்பேத்கர் மற்றும் ஈ.வெ.ரா., இயக்கங்கள், தேசிய பார்வை இல்லாமல் மாநில பார்வை கொண்டிருக்கலாம். ஆனால், அவை வலதுசாரி அரசியலுக்கு எதிரானவை. அதனால்தான், தமிழகத்தில் அவர்களால் காலுான்ற முடியவில்லை,'' என்றார்.