தி.மு.க., கூட்டணி 40 தொகுதியில் வெற்றி பெறும்: முத்தரசன் ஆருடம்
தி.மு.க., கூட்டணி 40 தொகுதியில் வெற்றி பெறும்: முத்தரசன் ஆருடம்
ADDED : பிப் 22, 2024 07:17 PM
பெரம்பலுார்:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் தெரிவித்தார்.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அரியலுார் மாவட்டம், பள்ளிவிடை இருளர் சமுதாய மக்களுக்கு சொந்தமான நிலத்தை அளந்து, பட்டா வழங்க வேண்டும், தவறும்பட்சத்தில் ஜெயங்கொண்டம் தாலுகா ஆபீஸ் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
விவசாயிகள் போராட்டத்திற்கு டில்லியை நோக்கி வருகிறார்கள். அழைத்துபேசி சுமூக தீர்வு காண்பதற்கு மாறாக, மிகக்கடுமையான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு துணை ராணுவத்தை அழைத்து விவசாயிகள் வந்து விவசாயிகளை அடித்து, மிரட்டி அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்கிற மிக மோசமான கொடூரமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் மீது நடத்திய கண்ணீர் புகை வீச்சு, ரப்பன் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் ஒரு விவசாயி இறந்துந்துள்ளார். போராட்டம் தீவிரம் அடையும் என விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற அரசாக இருக்கிற காரணத்தினால் சர்வாதிகாரத்தின் மூலம், அடக்குமுறையின் மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என முயற்சிப்பது மிகக்கடுமையான கண்டனத்துக்குரியது.
விவசாயிகளின் போராட்டம் மிகவும் நியாயமானது. இனியும் மோடி அரசு காலம்தாழ்த்தால் விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்தியா முழுதும் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். நிச்சயமாக வரும் லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற முடியாது. அவர்கள் வேண்டுமானால் சொல்லிக்கொண்டிருக்கலாம். 400 இடத்தில் வெற்றி பெறுவோம் என்று எதை வேண்டுமானாலும் சொல்லாம். வெற்றி பெறுவது சாத்தியம் அல்ல.
தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிக பலமாக இருக்கிறது. இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமான நல்ல முறையில் நடந்து கொண்டிக்கிறது. எந்த பிரச்சனையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.