விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க.,வும் புறக்கணிக்கிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க.,வும் புறக்கணிக்கிறது
ADDED : ஜூன் 16, 2024 01:49 PM

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க.,வின் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க., நேற்று(ஜூன் 15) அறிவித்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தே.மு.தி.க.,வும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாததால் தொண்டர்களின் உழைப்பு, பணம், நேரத்தை விரயம் ஆக்க தே.மு.தி.க., விரும்பவில்லை. தேர்தல் என்ற ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கரங்களினால் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல் தவறாக நடத்தப்படுகிறது. இதுவரை அனைத்து இடைத்தேர்தல் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தே.மு.தி.க., இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரேமலதா கூறியுள்ளார்.

