திமுக, அதிமுக இரண்டும் ஒன்று தான்; சொல்கிறார் செங்கோட்டையன்
திமுக, அதிமுக இரண்டும் ஒன்று தான்; சொல்கிறார் செங்கோட்டையன்
UPDATED : நவ 27, 2025 01:18 PM
ADDED : நவ 27, 2025 01:07 PM

சென்னை: ''ஏன் இங்கே இணைந்தார் என்று பலரும் கேட்கக்கூடும். காரணம் இருக்கிறது. திமுக, அதிமுக என்பது வேறு வேறு அல்ல. இரண்டு கட்சியினரும் ஒன்றாக இணைந்து தான் பயணம் செய்கின்றனர்,'' என்று தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தவெகவில் இணைந்த பிறகு, செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் எம்ஜிஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன். 1972ல் இந்த இயக்கம் தொடங்கிய போது தலைவருக்கு பின்னால், அணிவகுத்து நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன்.
100 நாட்கள் படம்
1975ல் கோவையில் பொதுக்குழு நடந்த போது, முழுப்பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணியை தலைவர் பாராட்டும் வகையில் முடித்தேன். இதற்கு என்னை எம்ஜிஆர் பாராட்டினார். அப்போது எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் இந்த கட்சி 100 நாட்கள் கூட நடக்காது. 100 நாட்கள் படம் போல் மறைந்து விடும் என்று சொன்னார்கள்.
3 கூர்களாக இயக்கம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நடத்தினோம். அதன் பிறகு பல்வேறு கால சூழ்நிலை காரணமாக இயக்கம் 3 கூறுகளாக பிரிந்தது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நாங்கள் எல்லோரும் வலியுறுத்தினோம். ஆனால் அந்த கருத்துக்களை செயல்படுத்த இயலவில்லை.
இன்றைய சூழ்நிலையில் ஒரே ஒரு கருத்து மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் என்று ஒருவன் நினைத்தால், தான் என்று ஆண்டவன் பார்த்துக்கொள்வான்; தண்டித்து விடுவான். எல்லோருக்கும் மேலே இருக்கும் இறைவன் நம்மை கண்காணிக்கிறான்.
வேறு வேறு அல்ல
50 ஆண்டு கால வரலாற்றில் இந்த இயக்கதிற்காக ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த எனக்கு, கிடைத்த பரிசு தான் உறுப்பினர் பதவி கூட இல்லாத நிலை. ஏன் இங்கே இணைந்தார் என்று பலரும் கேட்கக்கூடும். காரணம் இருக்கிறது. இன்றைக்கு திமுக, அதிமுக என்பது வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றாக இணைந்து தான் பயணம் செய்கின்றனர் என்பது நாடு அறிந்த ஒன்றாக இருக்கிறது.
துாய்மையான ஆட்சியை நடத்துவதற்கு ஒருவர் தேவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் விஜய் இடம்பெற்று இருக்கிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்லும் அப்பா, அம்மா இந்த முறை அவருக்கு (விஜய்) ஓட்டளியுங்கள் என்று சொல்லும். ஒரு மாற்றம் தமிழகத்தில் வேண்டும்.
வெற்றி பெறுவார்
தமிழகத்தில் ஒரு புதிய மாற்றம் உருவாக்கப்பட வேண்டும். புனித ஆட்சியை நடத்துவதற்கு ஒருவர் தேவை என்ற எண்ணம் மக்கள் மனிதில் நிறைந்து இருக்கிறது. எல்லா நாடுகளிலும், மாநிலங்களிலும் மாற்றம் நிகழ்கிறது. டில்லியிலும், பஞ்சாபிலும் மாற்றம் ஏற்பட்டது.
அதே மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். 2026 என்பது மக்களால் வரவேற்கப்படுகிற, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற, புனித ஆட்சி உருவாகும் வகையில் விஜய் வெற்றி பெறுவார். மாபெரும் புரட்சி உருவாகி வெற்றி என்ற இலக்கை எட்டுவார். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
கருத்து சொல்லுங்க மக்களே!
திமுக, அதிமுக என்பது வேறு வேறு அல்ல; இரண்டும் ஒன்றுதான்: தவெகவில் இணைந்த செங்கோட்டையன் கூறுவது?
1.சரி
2.தவறு

