ADDED : பிப் 19, 2024 06:11 AM

மயிலாடுதுறை : ''விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக தி.மு.க., அரசு உள்ளது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் நேற்று அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
மீத்தேன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின். அதை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க., அரசு.
குறுவை சாகுபடிக்காக கர்நாடகாவிடம் தண்ணீரை பெற முடியாமல், 3.5 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் காய்ந்துவிட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டு தொகை பெற்றுத்தர முதல்வர் தவறி விட்டார். விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அரசாக தி.மு.க., அரசு உள்ளது.
பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகிய பிறகு இஸ்லாமியர்களை அழைத்து முதல்வர் பேசுகிறார். மூன்று ஆண்டுகளாக சிறுபான்மையினர் கோரிக்கைகள் குறித்து பேசாதது ஏன்?
லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்காது. அதேநேரம், அ.தி.மு.க., தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

