தி.மு.க.,வில் பூத் வாரியாக வாட்ஸ்ஆப் குழு; வெளியேறுவதால் ஐ.டி., பிரிவு அதிர்ச்சி
தி.மு.க.,வில் பூத் வாரியாக வாட்ஸ்ஆப் குழு; வெளியேறுவதால் ஐ.டி., பிரிவு அதிர்ச்சி
UPDATED : ஏப் 16, 2025 06:28 PM
ADDED : ஏப் 16, 2025 07:04 AM

மதுரை : தி.மு.க.,வில் பூத் வாரியாகவாட்ஸ்ஆப்குழுக்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் குழுக்களில் இருந்து பலர் வெளியேறுவதால் வட்ட செயலாளர்கள், ஐ.டி., பிரிவினர் அதிர்ச்சிடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க., ஐ.டி., பிரிவில் 234 தொகுதிகளிலும் உள்ள பூத் வாரியாக தலா 100 முதல் 150 புதிய உறுப்பினர்களை சேர்த்துவாட்ஸ்ஆப்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அக்குழு வழியே அரசு நலத்திட்ட உதவிகள் விவரம், கட்சி செயல்பாடுகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அவர் பேசிய வீடியோக்கள் உள்ளிட்டவை பதிவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுவாட்ஸ்ஆப்மூலம் பணம் அனுப்பும் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் பூத் வாரியாக வாக்காளர்களை 'ஏதாவது ஒரு வழியில்' கவர இதுபோன்ற குழுக்களை ஆளுங்கட்சி ஏற்படுத்தியுள்ளது என விமர்சனமும் எழுந்துள்ளது.
இக்குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க அந்தந்த வட்டச் செயலாளர்கள் ஐ.டி., பிரிவினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வட்டச் செயலாளர்கள் பங்கு ஏனோ தானோ என உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்பட்ட பலர் அவர்களாகவே வெளியேறுகின்றனர். அவர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குள் வட்டச் செயலாளர்கள், ஐ.டி., பிரிவினர் திண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து வட்ட செயலாளர்கள் கூறியதாவது: இவ்வகை வாட்ஸ்ஆப் குழுக்களில் உறுப்பினர்களை சேர்க்க அவர்களின் பெயர், அலைபேசி, ஆதார் எண் என முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டியுள்ளது. ஆனால் பலர் தகவல் தர தயங்குகின்றனர். பலர் அவர்களாகவே குழுவில் இருந்து வெளியேறி விடுகின்றனர். அவர்களுக்கு பதில் புதிய நபர்களை சேர்ப்பது சவாலாக உள்ளது. 'ஏசி' அறையில் இருந்துகொண்டு யாரோ சிலர் இதுபோன்ற திட்டங்களை கட்சித் தலைமைக்கு ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் கள நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது என்றனர்.

